தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றாலம், தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலம் ஆகும்.
அப்போது, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து அருவிகளில் நீராடி மகிழ்வர். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கரோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்துக்கு அதிக அளவு வருவாய் ஈட்டி தரக்கூடிய குற்றாலத்தை மேம்படுத்துவதற்காக தென்காசி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட மெயின் அருவிக்கு அருகில் உள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், மீன் பண்ணை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று (ஜனவரி 7) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குற்றாலத்தை மேம்படுத்துவற்காக நிதி ஒதுக்குவது குறித்து முதல்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.