நுண் நிதிநிறுவனம் ஊழியர்களை இரவு நேரம் வீடுகளுக்கு அனுப்பி அத்துமீறுவதாக பெண்கள் புகார் - மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியர்கள் அத்துமீறல்
தென்காசி: சுத்தரபாண்டியபுரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் வழங்கிய நுண் நிதிநிறுவனம் தங்களது ஊழியர்களை இரவு நேரங்களில் வீடுகளுக்கு அனுப்பி கடன் வசூல் என்ற பெயரில் அத்துமீறி செயல்படுவதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்து தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் கரோனா நோய் தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். நோய் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் கடந்த ஆறு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் பொருளாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளது.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நுண் நிதி நிறுவனங்கள் மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடன் பெற்றுள்ளனர். அவர்களிடம் நுண் நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்யக்கூடாது என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
ஆனால் இந்த உத்தரவுகளை நுண் நிதி நிறுவனங்கள் கண்டு கொள்ளாது கடன்பெற்ற பெண்களிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டிபுரம் கிராமத்தில் நுண் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக்குழ பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடன் பெற்றுள்ளனர்.
அவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் கட்டாயப்படுத்தியும், இரவு நேரங்களில் வந்து தவணைத் தொகை கேட்பதுடன் தகாத வார்த்தைகள் பேசி, அத்துமீறி செயல்படுவதாக அப்பகுதி பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தங்களுக்கு கடன் வட்டி தொகையை கட்ட 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தகாத வார்த்தைகள் கூறி அடாவடியில் ஈடுபடும் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.