தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
அதேபோன்று தாமிரபரணியை நீர் ஆதாரமாகக் கொண்டு தென்காசி மாவட்டத்தின் நகர், ஊரகப் பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் பஞ்சம்
இந்நிலையில் தென்காசி மாவட்டம் நகர்ப்பகுதிகளான 10,11,12 வார்டுப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய நீரானது போதிய அளவில் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இதனைக்கண்டிக்கும் விதமாக தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்து போதிய அளவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என, கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் கைது!