தென்காசி:கேசவபுரம் பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் குட்டைக்குள் விழுந்த விபத்தில் இயந்திரத்தின் பின்னால் இருந்த மூதாட்டியும் குட்டைக்குள் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்.17) முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் ராஜேந்திரன் என்பவர் பயிரிட்ட நெற்பயிர்களானது அறுவடை செய்யப்பட்டு வந்தன.
அப்பொழுது, நெல் அறுவடை இயந்திரமானது பின்னோக்கி வரும்போது, அந்த வயல்வெளி பகுதியிலிருந்த 10 அடி ஆழமுள்ள ஒரு குட்டையின் ஓரமாக வேம்பநல்லூர் பகுதியை சேர்ந்த மூதாட்டியான அழகம்மாள் என்பவர் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்து உள்ளார். அதை கவனிக்காத நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுனர் தொடர்ந்து இயந்திரத்தை பின்னோக்கி இயக்கி வந்ததால், மூதாட்டி அழகம்மாள் மீது நெல் அறுவடை இயந்திரம் இடித்து நெல் அறுவடை இயந்திரமும், மூதாட்டியும் குட்டைக்குள் விழுந்தனர்.