தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 11:46 PM IST

ETV Bharat / state

தென்மேற்கு பருவக்காற்று தொடக்கம்: காற்றாலை மின்சார உற்பத்தி உயர்வு!

தென்காசி: தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலை மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது.

காற்றாலை
காற்றாலை

தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் அனு மற்றும் அணல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய சராசரி மின் தேவை சுமார் 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. ஆனால் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு சிறு கடைகள் அடைக்கப்பட்டதால் மின் தேவை வெகுவாக சரிந்தது.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தின் மின் தேவை 9,000 மெகாவாட் ஆக குறைந்தது. வழக்கமாக கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் மின்விசிறி மற்றும் ஏசி பயன்படுத்துவர். இதன் காரணமாக மின் தேவை அதிகரிக்கும். ஆனால் தற்போது கோடை நேரத்தில் கரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் மின் தேவை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் பத்தாயிரம் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனங்கள் மூலம் இந்த காற்றாலைகளில் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மின்சார வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 8,000 மெகாவாட் திறனுக்கு காற்றாலைகள் உள்ளன. இருப்பினும் காற்றின் வேகத்தைப் பொறுத்து ஆண்டுதோறும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகளவில் வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும்.

அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசுகிறது. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காற்றாலைகள் வேகமாக இயங்க தொடங்கியுள்ளது. அதேபோல் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இன்று நிலவரப்படி தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 26% அதாவது 72 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் பெறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று அடுத்த நான்கு மாதங்கள் நீடிக்கும் என்பதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் அனு மற்றும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியைக் குறைத்து காற்றாலை மின்சாரத்தை அதிக அளவில் வாங்கும். இதற்கான ஆயத்தப் பணிகளில் வாரிய அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details