தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்டகாசம் செய்யும் ஒற்றைக் காட்டு யானை : கண்டுகொள்ளாத வனத்துறையினர்! - வனத்துறையினர்

தென்காசி : வடகரை அருகே 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்த ஒற்றை காட்டு யானையையை மீண்டும் காட்டுக்குள் விரட்டக்கோரி புகார் தெரிவித்தும் வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை: கண்டுக்கொள்ளாத வனத்துறையினர்!
அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை: கண்டுக்கொள்ளாத வனத்துறையினர்!

By

Published : Dec 4, 2020, 5:53 PM IST

Updated : Dec 4, 2020, 6:11 PM IST

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வடகரை கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ராயர்காடு, சீவலங்காடு, சென்னா பொத்தை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இங்குள்ள விவசாயப் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. மேலும், வன விலங்குகள் நடமாட்டத்தைத் தடுக்க வைக்கப்படும் சோலார் மின் வேலிகளையும் காட்டு யானைகள் கால்களால் மிதித்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சீவலங்காடு பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து, அங்குள்ள தென்னை மரங்களை வேரோடு சாய்த்து பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஜாகீர் உசேன் கூறுகையில், “இப்பகுதியில் ஏக்கர் கணக்கில் தென்னை, வாழை விவசாயம் செய்யப்படுகிறது. 30 ஆண்டுப் பயிரான தென்னையை காட்டு யானை வேரோடு பிடுங்கி அட்டகாசம் செய்து வருகிறது. இதற்கான இழப்பீடுத் தொகை முறையாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வருவதில்லை” எனக் குற்றம் சாட்டினார்.

அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை: கண்டுகொள்ளாத வனத்துறையினர்!

மேலும், “கடந்த இரண்டு நாள்களில் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை இந்த ஒற்றைக் காட்டு யானை நாசம் செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் இழந்த மரங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். மேலும் இந்த ஒற்றைக் காட்டு யானையை காட்டுக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க...பிஎஃப்ஐ அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு!

Last Updated : Dec 4, 2020, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details