உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பீதி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்திலும் கரோனா பீதியால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தென்காசியில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது.
அதேபோல் 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும்கூட அவர்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பேருந்து நிலையங்களில் தற்காலிக காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தையில் குறைந்த விலையில் காய்கறி தொகுப்பு உள்ளிட்ட திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கரோனா பிரச்னை தீவிரம் அடைந்துள்ளதால், தற்போது மாவட்ட நிர்வாகம் பிற பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை. அதிலும் குறிப்பாக தண்ணீர் பிரச்னை பற்றி அலுவலர்கள் யாரும் கவனிக்கவில்லை. இதனால் தற்போது கோடை காலம் காரணமாக பல்வேறு கிராமங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தென்காசி அடுத்த வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாததால் தெருமுனையிலுள்ள பொதுக் குழாயில் தினமும் பெண்கள் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். ஆனால் சில தினங்களாக இந்த பொதுக் குழாயிலும் சரிவர தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது
சிறிதளவு சொட்டு சொட்டாக விழும் தண்ணீரை மட்டும் மணிக்கணக்கில் காத்திருந்து பெண்கள் பிடித்து செல்கின்றனர். அதுவும் சில மணி நேரங்களில் திடீரென நிறுத்தப்படுவதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கரோனா பீதியால் அலுவலர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் பணிச்சுமைகள் ஏற்பட்டிருப்பது உண்மை என்றாலும், நேரம் கிடைக்கும்போது இது போன்ற மக்களின் பிற பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!