தென்காசி:சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம், குறிஞ்சாகுளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாவளவன், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் எதுவும் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் தீண்டாமையை விதைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரிய செயல். 21வது நூற்றாண்டில் இந்த மாதிரி சம்பவம் நடைபெறுவது என்பது பெரும் குற்றம். பிஞ்சு குழந்தைகளிடம் சாதிய வன்முறையை காட்டி இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.
மேலும் அந்தத் தீண்டாமை கொடுமையை செய்திருப்பவன் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியானதால் காவல்துறை அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். இல்லையென்றால் காவல்துறை அவர்களை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது.
இந்த சம்பவத்தில் ஊர் கட்டுப்பாடு என்று கூறியிருப்பதன் பின்னணியில் அந்த ஊர்க்காரர்கள், நாட்டாமை அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு ஊருக்குள் வரக்கூடாது என்ற உத்தரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது அரசு பஸ் கண்ணாடியில் சுவரொட்டி ஒட்டியும், வால் போஸ்டர்கள் ஒட்டியும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம். ஆரம்ப காலத்தில் காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் மீது பொய் வழக்குகள் போட்டனர். அதனையும் தாங்கிக் கொண்டு என்னோடு பயணித்த அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.