தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும் போது இரு பிரிவு இளைஞர்களுக்கும் இடையே தகராறின் போது சாதியை சொல்லி திட்டி 2 பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக 4 பேர் மீது (PCR)வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 2 ஆவது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற குழந்தைகள் திண்பண்டம் வாங்குவதற்காக பெட்டி கடைக்கு சென்றபோது அதன் உரிமையாளர் குழந்தைகளிடம் "ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள்" என கூறினார்.
இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வைரலானதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன் (எ)மூர்த்தி(22) பெட்டிக் கடை உரிமையாளர் மகேஸ்வரன்(40) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
மேலும் குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் பெட்டிக்கடை கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில், இன்று (செப்-18) பாஞ்சாகுளம் கிராமத்திற்குள் தடுப்புகள் வைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது. கிராமத்திற்குள் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.