தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் பழ வியாபாரி, பூந்தோட்டத்தில் பெண்மணி சடலம்.. தென்காசியில் ஒரே நாளில் இரு படுகொலை! - தென்காசியில் இரண்டு கொலை சம்பவங்கள்

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் பழ வியாபாரி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதேபோல், சங்கரன்கோவில் அருகே பெண்மணி ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை சம்பவங்கள் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Kutrallam
குற்றாலம்

By

Published : May 15, 2023, 1:26 PM IST

தென்காசியை அதிர வைத்த இரண்டு கொலைகள்

தென்காசி:தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவர், குற்றாலத்தில் சீசன் கால கட்டங்களில், கேரளாவில் இருந்து ரம்புட்டான் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இன்னும் சில நாட்களில் குற்றாலத்தில் சீசன் தொடங்க உள்ள நிலையில், சீசன் காலங்களில் விற்பனை செய்வதற்காக ரம்புட்டான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த ஏலத்தில் வல்லம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரும் பங்கேற்றுள்ளார். ஏலத்தில் காளிதாஸ், சுடலை இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், சுடலை ஏலத்தை எடுத்துள்ளார். இதனால் காளிதாஸ் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மே.14) குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியில் சுடலை நின்று கொண்டிருந்தபோது, தனது நண்பருடன் வந்த காளிதாஸ் சுடலையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சுடலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குற்றாலம் போலீசார் சுடலையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சுடலையை வெட்டிக் கொலை செய்த காளிதாஸ் என்பவர் குற்றாலம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காளிதாஸின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மற்றொறு கொலை சம்பவம் நடந்துள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தில் சந்தனபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பிச்சிப்பூ தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பூ பறிப்பதற்காக இன்று(மே.15) காலை பெண்கள் சென்றபோது, அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரவு உடையுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

அரிவாள் வெட்டுகளில் பெண்ணின் முகம் சிதைந்திருந்ததாக தெரிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த குருவிக்குளம் போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்மணி யார்? கொலைக்கான காரணம் என்ன? யார் கொலை செய்தது? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நடந்த இந்த கொலை சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவட்டம் முழுவதும் ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: TN Toxic Liquor Death: விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details