தென்காசியில் அண்ணாமலையின் யாத்திரையை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறை பாலத்தில் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதால் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களுக்கும், பாஜகவினருக்கும் கைகலப்பு தென்காசி: சங்கரன்கோவில், புளியங்குடி செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறை பாலத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரையை ஒட்டி, பாஜவினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரவிருப்பதால், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட சுவர்களில் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நேற்று (ஆகஸ்ட் 29) புளியங்குடி சாலையில் உள்ள பாலத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை குறித்த சுவர் விளம்பரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அழித்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாஜக சங்கரன்கோவில் நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது நெடுஞ்சாலைத் துறை பணியாளர் சங்கரபாண்டினுக்கும், விக்னேஷுக்கும் இடையே முற்றிய வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறி உள்ளது.
இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இது குறித்து சங்கரன்கோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் பாஜக நிர்வாகிகளான பாஜக நகர இளைஞரணித் தலைவர் விக்னேஷ் மற்றும் நகரத் தலைவர் கணேசன் ஆகிய இருவரையும், வீட்டிற்குச் சென்று சங்கரன்கோவில் துணை கண்காணிப்பாளர் சுதிர் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் 3ஆம் தேதியில் இருந்து தென்காசி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொள்வதால், அது குறித்த விளம்பரம் தொடர்பாக நடைபெற்ற இந்த மோதல் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினரின் வருகையை ஒட்டி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த அனைத்து சுவர் விளம்பரங்களும் முழுவதுமாக அழிக்கப்பட்டு வருவது அதிகாரிகளின் ஒரு தலைபட்ச செயல்பாட்டைக் காட்டுவதாக பாஜக தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், நான்கு நாட்கள் தென்காசி மாவட்டத்தைச் சுற்றிலும் யாத்திரை பயணத்தில் ஈடுபட இருக்கும் அண்ணாமலை வருகையை ஒட்டி இத்தகைய எதிர்ப்பு கிளம்பி இருப்பது மாவட்டம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பல்வேறு கட்சியினர் தங்கள் தலைவர்கள் குறித்தும், அவர்கள் வருகை குறித்தும் பாலங்களில் எழுதியிருந்த பொழுதும், தற்பொழுது அண்ணாமலை வருகையை ஒட்டி மட்டும் நெடுஞ்சாலை துறையினர் இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க:பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!