வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் கைவரிசை..15 பவுன் நகை மீட்பு! தென்காசி: ராயகிரி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருபவர், குருவம்மாள் (60). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் வசிக்கும் தனது மகள் பூங்கொடியை பார்க்கச் சென்றுள்ளார்.
பின், சென்னையில் இருந்து செப்டம்பர் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு, ராயகிரியில் உள்ள தன் வீட்டிற்க்கு வந்துள்ளார். அதன் பின்பு, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது இரண்டாவது மகன் கணேசனுக்கு பெண் பார்க்கச் செல்வதற்காக வீட்டில் இருந்த நகையை அணிவதற்காக பீரோவைத் திறந்துள்ளார்.
அப்போது, பீரோவில் வைத்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தான் ஊருக்குச் சென்றிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றிருக்க வாய்புள்ளது என சந்தேகம் அடைந்த குருவம்மாள், இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று (அக்.27) சந்தேகத்தின் பேரில் குருவம்மாள் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்த பார்வதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் விசாரணையில், ராயாகிரி பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருபவர், பார்வதி (33). கடந்த சில மாதங்களாக குருவம்மாளின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். மாதம் மாதம் வாடகை பணம் கொடுக்கும்போது குருவம்மாள் பணத்தை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பட்டாக்கத்தியுடன் ரகளை செய்த போதை ஆசாமி.. இருவருக்கு வெட்டு - பதைபதைக்கும் காட்சிகள்!
மேலும், குருவம்மாள் பீரோ சாவியை எங்கு வைப்பார் என்பதை தெரிந்து கொண்டு, குருவம்மாள் ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்று 15 பவுன் நகையை திருடியுள்ளார். திருடிய பணத்தில் அதே பகுதியில் பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கும் செல்வராஜ் (37) என்பவருக்கு முப்பதாயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் விசாரனை நடத்தியபோது, இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், திருடிய நகைகளை அடமானம் வைத்து இவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அடமானம் வைக்கப்பட்ட அனைத்து நகைகளையும் போலீசார் மீட்டு, குருவம்மாளிடம் ஒப்படைத்தனர். மேலும், நகைகளை திருடிய பார்வதி மற்றும் அவருக்குத் துணையாக இருந்த செல்வராஜ் ஆகிய இருவரையும் சிவகிரி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
இதையும் படிங்க:பெட்ரோல் குண்டு விவகாரம்: கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு!