தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ராகர்க் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் வழிக்காட்டுதல் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் தென்காசி மாவட்ட காவல் துறையினரும் இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தென்காசி புதிய பேரூந்து நிலையப்பகுதியில் காவல் துறையினர் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது தென்காசி உடையார் தெருவைச் சேர்ந்த மணி செல்வம் மற்றும் செங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனையடுத்து அவர்களது வாகனத்தில் காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில் நான்கு கிலோ கஞ்சாவும் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் கட்டுக்கட்டாக வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதனை புழக்கத்தில்விடுவதற்கும் கஞ்சா மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறை முனைப்புடன் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது