தென்காசி காதல் திருமண விவகாரம் - கணவர் பரபரப்பு வாக்குமூலம் தென்காசி: கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர், மாரியப்பன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு தற்போது தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பட்டேல், தென்காசி பகுதியில் 20 ஆண்டுகள் காலமாக மரக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் கிருத்திகா பட்டேல். இவரும் வினித் என்பவரும் பள்ளிப்பருவம் முதல் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதியன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு பெண் வீட்டார், கணவர் வினித்தை தாக்கிவிட்டு, கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இதனைத்தொடர்ந்து இன்று (பிப்.02) கிருத்திகா பட்டேல் தனக்கு மைத்திரீக் பட்டேல் என்பவருடன் திருமணமாகி விட்டதாகவும், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும் இது குறித்து யாரும் இடையூறு செய்ய வேண்டாம் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காதல் கணவர் வினித் கூறுகையில், 'என் மனைவி முழு சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனக்கு தன் பெற்றோர் வாயிலாக அச்சுறுத்தல் ஏற்படும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை நிரூபிக்கும் விதமாக பெண் வீட்டார்கள் அவளை வலுக்கட்டாயமாக கடத்திச் செல்கின்றனர். மேலும் மிரட்டி விருப்பமின்றி வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவளை மிரட்டி வீடியோ பதிவு செய்துள்ளனர். அவர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு நம்பிக்கை இல்லை. அவரை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் போக்சோவில் கைது!