தென்காசி: தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான புளியரை காவல் நிலையம் சோதனைச் சாவடி பகுதியில் 2 பேரிகாடுகள் அமைக்கப்பட்டு வழக்கம்போல் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று(பிப்.17) கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த ஒரு லாரியானது, புளியரை சோதனைச் சாவடி முன்பு ஓரமாக லாரியை நிறுத்த மெதுவாக இயக்கி வந்துள்ளார்.
அப்போது, அதே திசையில் லாரி பின்பக்கமாக, கேரள மாநிலம், கோட்டயத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தென்காசியை நோக்கி வந்து கொண்டிருந்த கேரள அரசு பேருந்தானது, லாரியை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கேரள அரசுப்பேருந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த புளியரை போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு, கேரள எல்லையான புளியரைப் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தால் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வாகன நெரிசலை போலீசார் சரி செய்தனர். மேலும், இந்த பேருந்தில் பயணம் செய்து வந்த பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்று விட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகளும், சபரிமலையில் மலை ஏற முடியாத முதியவர்களும் ஏராளமானோர் வந்துள்ளனர்.
தற்போது, அவர்கள் அனைவருக்கும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியில் நடந்த இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நகைக்கடையில் கத்திமுனையில் மிரட்டிப் பணம் பறிக்க முயற்சித்த இளைஞர் கைது!