தென்காசி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாது தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்வதால் குற்றாலத்திலுள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதம் முதல் அனுமதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது இந்த கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தற்காலிமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.