தென்காசி:கோடைக் காலம் மட்டும் இன்றி எல்லா காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் விளங்குகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கால் தடுப்பைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளும் வெள்ளப்பெருக்கில் தப்பவில்லை.