தென்காசி: குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மாதங்களில் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாக துவங்கினாலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குவிந்த வண்ணமாகவே காணப்படுகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக குற்றாலம் மெயின் அருவி பகுதியில், பல கடைகளில் விபத்து நேரிட்டு, அதில் சுமார் 40க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகின.
இதன் காரணமாக, குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால், தற்பொழுது கடந்த ஒரு வார காலமாகவே தென்காசி மாவட்டம் முழுவதும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருவதாலும், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக கனமழை பெய்ததாலும், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.