செங்கோட்டை:தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர், சந்தனகுமார். இவரது மனைவி கௌசல்யா. வேலைக்குச் செல்லும் சந்தனகுமார் வீட்டுக்குத் திரும்பும் போது மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தான் தம்பதியர் இடையே ஏற்பட்ட தகராறில், கௌசல்யா மீது நாட்டு வெடிகுண்டை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார், சந்தனகுமார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சந்தனகுமார் - கௌசல்யா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு மதுபோதையில் சந்தனகுமார் வந்துள்ளார். இதையறிந்த மனைவி கௌசல்யா கண்டித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆவேசம் அடைந்த சந்தனகுமார் கையில் கிடைத்த பொருட்களைக்கொண்டு கௌசல்யாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் போதை உச்சத்துக்கு ஏறவே, வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கௌசல்யாவின் தலையில் வீசியுள்ளார். பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு கௌசல்யா கீழே சரிந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.