தென்காசி மாவட்டம் நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே மர ஆலை தொழிலதிபர் ஜெயபால் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 7ஆம் தேதி பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
வீட்டில் தனியாக இருந்த ஜெயபாலின் மனைவி விஜயலட்சுமியை அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கட்டிப் போட்டு வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தென்காசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து எஸ்.பி சுகுணா சிங் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் கோகுல் கிருஷ்ணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் சந்தேகத்தின் அடிப்படையில் தென்காசி அருகே உள்ள மேலமெய்ஞானபுரம் சேர்ந்த மணிகண்டன் (27), ரமேஷ் (27), மேல கடையநல்லூரைச் சேர்ந்த அருள் சுரேஷ் (31) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது.
தொழிலதிபர் மனைவியை கட்டிப்போட்டு நகை திருட்டு இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறுகையில், "புகார்தாரர் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததன் காரணமாகவும், கரோனா காலம் என்பதால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டது. குற்றவாளிகள் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது பிடிபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 126 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதன் மூலம் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்காணிக்க ஏதுவாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க... மூத்தத் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை; 8 பேர் கைது!