தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெரும்தேவியர் ஆலயம் உள்ளது. இங்கு கார்த்திகை மாதத்திலுள்ள பவுர்ணமி பூஜை மற்றும் கார்த்திகை தீப ஒளி திருநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு முப்பெரும் தேவியர் கோயிலுக்கு பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர். இக்கோயிலில் இன்று சிறப்பு நிகழ்ச்சியாக காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை மற்றும் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை குறித்து குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
இதனைத்தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு குங்குமம், தயிர், சந்தனம், தேன் உள்பட 21 வகையான நறுமண பொருட்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. மேலும், பவுர்ணமி பூஜையை முன்னிட்டு 1008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.