தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எந்த சான்று வாங்கச் சென்றாலும் அதற்கு லஞ்சம் கொடுக்காமல் சான்றோ, எந்த பணியோ முடிக்கமுடியாத நிலை உள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர், மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த சான்று வாங்க எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது, எந்த பணிக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என பட்டியலிட்டு நகர் பகுதி முழுவதும் இடதுசாரி கட்சிகள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருவேங்கடம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இதன்படி, திருவேங்கடம் வட்டத்திற்குள் சரள் அள்ள 50 ஆயிரம் ரூபாய், சப்டிவிசன் பேப்பர் 5 ஆயிரம் ரூபாய், பிறப்பு, இறப்பு;வாரிசு சான்றுதழ் வழங்க 2 ஆயிரம் ரூபாய், இலவச பட்டா வழங்க 10 ஆயிரம் ரூபாய், கல்குவாரி மாத ஆய்வுக்கு 10 ஆயிரம் ரூபாய், செங்கல் சூளை ஆய்வு 2 ஆயிரம் ரூபாய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சப்பணத்தால் வட்டாச்சியர் மாதம் பெறும் வருமானம் ஐந்து லட்சம், அவருடைய டிரைவருக்கு மாதம் ஒரு லட்சம், எனவே பொதுமக்கள் விழித்திடுவீர் என அச்சடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திருவேங்கடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து திருவேங்கடம் வட்டாச்சியர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டுவரும் அலுவலர்கள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.