தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவுடையபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் திருமலைகுமார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையாகிய இவர், அவ்வப்போது ரகளை செய்து வருதோடு, மது அருந்த பணம் கேட்டு வீட்டில் தொந்தரவு செய்து வருவதும் உண்டு.
அதே தெருவில் முருகன் என்பவர் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலும் இங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 13) அதிகாலை நேரத்தில் மது அருந்திய திருமலைக்குமார் போதையில் முருகன் நடத்திவரும் பெண்கள் அழகு நிலையத்தின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த மின் விசிறி, தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது திருமலைக்குமார் திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.