தென்காசி: அருளாட்சி அருகே உள்ள வேலாயுதபுர கிராமத்தில் மிகப்பெரிய இயேசுநாதரின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இயேசுநாதர் சிலுவையை சுமந்து செல்வது போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலே முதன்முறையாக மிகப்பெரிய இயேசுநாதரின் திருவருட்சிலை குருசு மலை மாதா கோவில் அருகே கட்டப்பட்டது மிகவும் பிரசித்த பெற்றதாக அமைந்துள்ளது. மலை அடிவாரப் பகுதியில் இந்த இடம் உள்ளதால் காற்றோட்டமான இடமாகவும் மிகவும் கண்களுக்குக் கவர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த பகுதியாகவும் அமைந்துள்ளது.
மேலும், இந்த சிலையில் உள்ள சிலுவை 25 அடி உயரமும், அதனைச் சுமந்து செல்லும் இயேசுநாதர் 20 அடி உயரமும் உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையினை பேராயர்கள் பிரதிஷ்டை செய்து திருப்பலி நடத்தினர்.
திருப்பலி நடந்த பொழுது வேலாயுதபுரம், அருளாட்சி, புளியங்குடி, சிந்தாமணி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வருகைதந்த அனைத்து பொதுமக்களும் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இயேசுநாதரின் சிலையைக் கண்டு மகிழ்ந்ததோடு, அந்தப் பகுதியில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டு, பிரார்த்தனைகள் செய்தனர்.