தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புளியங்குடி எலுமிச்சை சந்தையில் விலை வீழ்ச்சி.. ஒரு பழம் 50 பைசாவிற்கு விற்பனை;விவசாயிகள் வேதனை! - எலுமிச்சை விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் கவலை

தொடர் மழையின் காரணமாக எலுமிச்சை விலை திடீர் வீழ்ச்சி அடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஒரு எலுமிச்சைபழம் 50 பைசாவிற்கு விற்பனையாவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை விலை வீழ்ச்சியால்  வியாபாரிகள் கவலை
தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் கவலை

By

Published : Jul 11, 2023, 3:56 PM IST

புளியங்குடி எலுமிச்சை சந்தையில் விலை வீழ்ச்சி.. ஒரு பழம் 50 பைசாவிற்கு விற்பனை;விவசாயிகள் வேதனை!

தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான புளியங்குடி, எலுமிச்சை பழத்திற்குப் பேர் போன இடமாகும். மேலும் புளியங்குடி பகுதிக்கு லெமன் சிட்டி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இங்கு ஏராளமான பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்வது வழக்கமாகும்.

புளியங்குடி, சிவகிரி, கடையநல்லூர், புன்னையாபுரம், பாம்பு கோவில் சந்தை, சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர், சிங்கிலிபட்டி, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் எலுமிச்சை சாகுபடி செய்வதை முதன்மையாகக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் எலுமிச்சை பழங்கள் தரம் பிரிக்கப்பட்டு சந்தையில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் அதிக அளவில் எலுமிச்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கோடைகாலத்தில் எலுமிச்சை பழங்களுக்குத் தேவை அதிகமாக இருப்பதால் பழத்திற்கு நல்ல விலை கிடைக்கும். அதேபோல், மழைக்காலங்களில் எலுமிச்சை விலை வீழ்ச்சி அடைவதும் வாடிக்கையாக ஒன்று.

ஆனால், கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக எலுமிச்சை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எலுமிச்சை சாகுபடியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள புளியங்குடியினை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர். மேலும், கடந்து சில தினங்களாகவே குற்றால சீசன் ஆரம்பித்து வருவதால் புளியங்குடி சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் தினசரி சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், எலுமிச்சை சாகுபடி அப்பகுதியில் குறைவாகவே காணப்படுகிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் அதிகப்படியாக அண்டை மாநிலமான கேரளா பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது மழைக்காலம் அதிகரித்து உள்ளதால் ஏற்றுமதியும் குறைவாகவே காணப்படுகிறது. இத்தகைய சூழலில் ஏற்றுமதியும் குறைந்து, எலுமிச்சை பழத்திற்கான விலையும் மிகக் குறைவாக காணப்படுவதால் விவசாயிகள் பெரிதும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை ஒரு பக்கம் அதிகரித்து விவசாயிகளுக்கு லாபம் சேர்த்தாலும், மற்றொரு பக்கம் எலுமிச்சை பழத்தின் விலை குறைந்து குறிப்பிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. மேலும் கடந்த வாரங்களில் எலுமிச்சை பழங்களின் விலை ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், தற்போது தொடர் மழை காரணமாக ரூ. 18க்கு விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு பழம் 50 பைசா என்கிற விலையில் ஒரு ரூபாய்க்கு 2 பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details