தென்காசி :மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் , ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்கள் சாரல் மழை பொழியும் காலமாகும். இதன் காரணமாக இங்கு உள்ள அருவிகளில் குளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, ஒரு மாதம் தாமதமாக பெய்தாலும்; அவ்வப்போது உருவாகும் புயல் மழை காரணமாக அருவிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள். இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீசனை முன்னிட்டு ஏராளமான உணவகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு நார்த் இண்டியன், சவுத் இண்டியன், சைனீஸ், மண்பானை சமையல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.