தென்காசி:தென்காசி நகர் பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில், சமீபத்தில் புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 5 தாய்மார்கள் மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும், சேயும் குணமான உடன் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாயையும், சேயையும் தமிழ்நாடு அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் தாய் சேய் ஊர்தி சேவையில் மருத்துவர்கள் இன்று (ஜூன் 5) அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து தாய் சேய் ஊர்தியில் 5 தாய்மார்கள் பயணித்த நிலையில், தாயையும் சேயையும் சொந்த ஊரில் இறக்கிவிட்ட பிறகு அதன் ஓட்டுநர் வலுக்கட்டாயமாக தாய்மார்களின் உறவினர்களிடம் ரூ.500 வசூல் செய்துள்ளார்.
குறிப்பாக, "ஆட்டோவில் சென்றால் கூட ரூ.500 கேட்க மாட்டாங்க, ஆனா மொத்தமாக ஒரே வாகனத்தில் 5 பேரை அடைத்து வைத்து ஆளுக்கு ரூ.500 வாங்கி இப்படி கொள்ளை அடிக்கிறீர்களே" எனக் கூறியபடி அவர்களது உறவினர்கள் ரூ.500-யை தாய் சேய் ஓட்டுநரிடம் கொடுத்துள்ளனர்.
இதனைப் பார்த்த ஒரு இளைஞர் அந்த தாய் சேய் ஊர்தியைப் பின் தொடர்ந்து, அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது, தற்போது வைரலாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தினால் தான் அரசு மருத்துவமனைகளை நாடி ஏராளமானோர் சென்று மருத்துவத்தை பெற்று வருகின்றனர். ஆனால், அங்கும் லஞ்சம் என்கின்ற பெயரில் கட்டணம் வசூலிப்பது ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தியாக்குவதில் மிகப்பெரிய தடையாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தாய் சேய் ஊர்தி ஓட்டுநர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் லஞ்சம் கேட்டு தொல்லை தருவதாக பலரும் குற்றம்சாட்டிய நிலையில், அரசு இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கையாகும். அதே வேளையில், இவ்வாறு மருத்துவமனையில் பணியாற்றக்கூடியவர்கள் நோயாளிகளுக்கும், சிகிச்சைக்காக வருபவர்களிடம் இத்தகைய செயல்பாடுகளில் அரசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தக்க விசாரணை செய்து நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கொடுத்த பணத்தை திருப்பித்தராத நண்பர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை!