தென்காசி:கடையம் அருகே உள்ள சிவசைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அங்குள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்புப்பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் காய்கறி விற்பதற்காக வியாபாரி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்துக் குதறியுள்ளது. வியாபாரி கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கையில் கரடியை விரட்டுவதற்கான எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில் சைலப்பன் மற்றும் நாகேந்திரனையும் கரடி கடித்து குதறி விட்டு வனப்பகுதிக்குள் ஓடி விட்டது.
இந்நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.