தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுப்பன்றிகள் தொல்லையால் தவித்துவரும் விவசாயிகள்!

தென்காசி: விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைத்துவிட்டு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகளை தொல்லையால் தவித்துவரும் விவசாயிகள்!
காட்டுப்பன்றிகளை தொல்லையால் தவித்துவரும் விவசாயிகள்!

By

Published : Jun 4, 2020, 7:42 AM IST

Updated : Jun 4, 2020, 12:22 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதி அருகே மலை அடிவாரத்தில் சிவசைலம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மலையடிவாரத்தில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலமாக இங்கு காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெருமளவு இழப்பை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக இரவு, மலைப்பகுதிகளில் இருந்து இறங்கிவரும் காட்டுப்பன்றிகள் விவசாய பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்கின்றன. காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் ஒருபுறமிருக்க, தற்போது கரடிகளும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதிக்குள் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையிடம் புகாரளித்தனர். அதன்பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் கரடி ஒன்று சிக்கியது. தற்போது இந்தப் பகுதியில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர், தற்போது செடிகள் முளைத்துவரும் நிலையில் கரடிகள், காட்டுப்பன்றிகள் கூட்டம் இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.

காட்டுப்பன்றி தோண்டி போட்ட பகுதி

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சங்கர் நம்மிடம் கூறுகையில்,

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சங்கர் நம்மிடம் கூறுகையில், "நான் வேர்க்கடலை விவசாயம் செய்து வருகிறேன். காட்டுப்பன்றிகள் எங்கள் நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம், வனத்துறை அலுவலர்களிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தில் தவித்து வருகிறோம். எனவே இனியும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்துவிட்டு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை" என்றார்.

வேலாயுதம் எனும் விவசாயி கூறுகையில், "காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலிலிருந்து நீக்காமலேயே அவற்றை விரட்டுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதுபோன்று இங்கேயும் காட்டுப்பன்றிகளை நாங்களே விரட்டிக்கொள்ள அரசு அனுமதி தரவேண்டும்" எனக் கூறினார்.


இதையும் படிங்க:ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் மேள தாளத்துடன் மனு

Last Updated : Jun 4, 2020, 12:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details