தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அமைந்திருக்கும் சுகாதார துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தற்காலிகமாக மூடப்பட்டது.
தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 924 பேர் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குவதால், மாவட்டம் முழுவதும் சுகாதார தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை, முதல்கட்டமாக வெளி நாடு, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தொற்றானது உள்ளூர் வாசிகளுக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் நோய்த் தொற்று உயர்ந்து வரும் காரணத்தால் வியாபாரிகள் சங்கத்தினர் தாமாக முன்வந்து கடைகளின் திறப்பு மற்றும் அடைப்பு நேரத்தை குறைத்துள்ளனர். இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோரும் சமீப காலமாக அதிகமாக நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்கள் - பீதியில் சக ஊழியர்கள்!