தென்காசி - காசி சுற்றுலா ரயில் தென்காசி: பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் தீபாவளி அன்று கங்கையில் புனித நீராடும் வகையிலும், புனித தலங்களுக்குச் செல்லும் வகையிலும் "தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை" என்ற பெயரில் தென்காசியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் காசி வரை சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இது குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (செப் 08) தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்ற நிலையில், இதில் பங்கேற்ற ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டல மேலாளர் சுப்பிரமணி என்பவர் பேசுகையில், தீபாவளி அன்று புனிதத் தலங்களுக்குச் செல்லும் வகையில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதற்கான பயணம் நவம்பர் மாதம் 9ஆம் தேதி தென்காசியில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'சந்திரமுகி 2' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன?
மேலும், இந்த சிறப்பு யாத்திரை ரயிலானது மதுரை வழியாக திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக பல்வேறு புனித தலங்களுக்குச் சென்றடையும். அதன்பின் தீபாவளி அன்று காசியை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காசி பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ராமேஸ்வரம் வரும் இந்த சிறப்பு ரயிலானது, அங்கு உள்ள புனித தலங்களில் யாத்திரை செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சிறப்பு சுற்றுலா ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், சுற்றுலா செல்ல, நபர் ஒன்றுக்கு குளிர்சாதன பெட்டியில் ரூ.30,500 கட்டணமாகவும், சாதாரண பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு ரூ.16,850 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், இந்த ரயிலானது மொத்தம் 8 நாட்கள் இரவு உள்பட 9 நாட்கள் பயணம் மேற்கொண்டு தனது பயணத்தை நிறைவு செய்யும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:உலகளாவிய தெற்கின் குரலை ஜி20 மாநாடு பிரதிபலிக்கும் - அமிதாப் காந்த்