தென்காசி:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி,தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று (டிச.16) முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வரும் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் நள்ளிரவிலிருந்து பெய்து வரும் மழை காரணமாகக் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்து அருவி உள்பட அனைத்து இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளப் பெருக்கால் குற்றால அருவிகளில் மக்கள் குளிக்கத் தடை போடப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கையாகத் தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு நாளை (டிச.18) விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தென்காசி மக்களுக்கு மழைக்கான முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அதில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நீர்நிலைகளுக்குச் சென்று குளிக்க வேண்டாம் எனவும் நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல வேண்டாம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம் எனவும் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மழைக்காலங்களில் பேரிடர் மீட்புக் குழு அறிவிப்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட பேரிடர் உதவிக் குழுவினை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அவசர உதவிகளுக்குப் பகுதி வாரியாக தொடர்பு எண்கள்:
தென்காசி பகுதி - 97905 14761