பாவூர்சத்திரம்:தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பணியில் இருந்த ரயில்வே கேட் பெண் ஊழியரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில், கேட் கீப்பராக கேரளாவை சேர்ந்த ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி ரயில்வே கேட் பணியில் ஈடுபட்ட இவரை, மர்ம நபர் ஒருவர் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். தப்பியோட முயன்ற பெண் ஊழியரை, அறையில் இருந்த போன் ரிஷிவரால் மரம் நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில், மர்ம நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி உள்ளார்.
மர்ம நபரின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பெண் ஊழியர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கேட் கீப்பரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் ரயில்வே கேட் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான பாவூர்த்திரத்திர சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டிற்காக மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில இளைஞர்கள், ரயில்வே கேட் அருகே டென்ட் அமைத்து தங்கியுள்ளனர்.