தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தின் லெமன் சிட்டி; சோதனையில் இருந்து மீண்டு வருமா?

Lemon City of Tamil Nadu: "லெமன் சிட்டி" என்று அழைக்கப்படும் புளியங்குடி, எலுமிச்சை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கக்கூடிய நிலையில், மாவட்ட நிர்வாகம் எலுமிச்சை விவசாயத்தையும், விவசாயிகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பதன் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழகத்தின் ‘லெமன் சிட்டி’.. சாதனைகளுக்குள் இருக்கும் வேதனையை விவரிக்கும் செய்தித் தொகுப்பு
தமிழகத்தின் ‘லெமன் சிட்டி’.. சாதனைகளுக்குள் இருக்கும் வேதனையை விவரிக்கும் செய்தித் தொகுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 10:26 PM IST

"லெமன் சிட்டி" என்று அழைக்கப்படும் புளியங்குடி

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, புளியங்குடி பகுதியில் எலுமிச்சை சாகுபடியும், விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், எலுமிச்சை உற்பத்தி மிகவும் பிரபலமாக உள்ள இந்த புளியங்குடி கிராமம் தமிழகத்தின் ‘லெமன் சிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு விளையும் எலுமிச்சை சுமார் 50 கிராம் எடையுடன் இருக்கும். அதேபோல, ஒரு மரத்தில் 900 முதல் 950 எலுமிச்சைகள் வரை காய்க்கும்.

நல்ல மகசூல் தரக்கூடிய தனித்தன்மை வாய்ந்த இந்த எலுமிச்சை, 15 நாட்கள் ஆனாலும் கெடாமல் தனித்தன்மையுடன் இருக்கக் கூடியது. தஞ்சாவூருக்கு நெல் என்றால், தென்காசி மாவட்டம் புளியங்குடி, எலுமிச்சைக்கு பெயர் பெற்றது. அந்த வகையில், புளியங்குடி ‘எலுமிச்சை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு புளியங்குடி பகுதியில் உற்பத்தியாகும் எலுமிச்சைக்கு புளியங்குடி பகுதியிலேயே எலுமிச்சை சந்தையும் உள்ளது. எலுமிச்சை விற்பனைக்காக மட்டுமே ஒரு சந்தை செயல்பட்டு வருவது இங்கு மட்டுமே என்று கூறலாம். அந்த அளவுக்கு ஏராளமான எலுமிச்சையை சந்தைக்கு மூட்டை, மூட்டையாகக் கொண்டு வந்து ஏலத்திற்கு விடுவர்.

இங்கு விற்பனை செய்யப்படும் எலுமிச்சை பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் பிற மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கோடைகால விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை 100 முதல் 150 வரையில் ஏலம் விடப்படும். அந்த வகையில், புளியங்குடியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 டன் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோடை காலங்களில் எலுமிச்சைபழம் சீசன் களைகட்டி காணப்பட்டாலும், மழைக்காலங்களில் அதற்கான விற்பனை மந்தமாகவே செயல்படும்.

இவ்வாறு எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு, ‘லெமன் சிட்டி’ என்ற பெருமையைப் பெற்றிருக்கும் புளியங்குடியில் விளையும் எலுமிச்சைக்கு, புவிசார் குறியீடு கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவைகள் ஒருபுறம் இருக்க, எலுமிச்சை விவசாயத்தில் விவசாயிகள் படும்பாடும் குறைவின்றி காணப்படுகிறது.

எலுமிச்சை சாகுபடியில் ஒரு கன்றை வைத்து விளைச்சலை எடுப்பதற்கு சுமார் ஐந்து வருடங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். மேலும் நோய் பாதிப்பு, வேலை ஆட்கள் கூலி, பராமரிப்புச் செலவு என இவைகள் போக, ஒரு சில காலங்களில் சொற்ப வருமானமே இருக்கும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இவ்வாறு எலுமிச்சையின் பெயர் பெற்று விளங்கும் புளியங்குடி விவசாயிகளுக்கு, அரசு ஊக்கப்படுத்தும் விதமாக எவ்வித மானியமும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

புளியங்குடியில் டன் கணக்கில் உற்பத்தியாகும் எலுமிச்சைகளை பாதுகாக்க குளிர் பதனக்கிடங்கு வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இங்கு வரும் அரசியல் கட்சியினர், புளியங்குடி விவசாயிகளுக்கு என தனியாக தேர்தல் அறிவிப்புகளை விடுப்பதும், அவைகள் செயல்படுத்தாத சூழலில் அப்படியே இருப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

மேலும், இங்குள்ள விவசாயம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் நடைபெறுவதால், வனவிலங்குகளின் அட்டகாசங்களும் நிறைந்து காணப்படுகிறது. வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அதற்கான உரிய நிவாரணமும் அரசு சார்பில் கிடைக்கப் பெறுவதில்லை.

எலுமிச்சைக்கு பெயர் பெற்று காணப்படும் இந்த நகரத்தில் தங்கள் குறை, நிறைகளை தெரிவிக்கும் வகையில், தங்கள் பகுதிகளுக்கு அரசு சார்பில் அலுவலகம் தேவை எனவும், தங்களுக்கு உரிய மானியங்கள் கொடுத்து விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பழமா? பூச்சிக்கொல்லியா? எதை சாப்பிடுறீங்க?.. கழுவினால் மட்டும் போதுமா?

ABOUT THE AUTHOR

...view details