தென்காசி: தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை பொங்கல். விவசாயத்தைப் போற்றும் வகையில், தமிழர் பண்பாட்டோடு கலந்துள்ள இந்த பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் அதன் சிறப்புத் தன்மை மாறாமல் தமிழர்கள் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து, வீட்டு வாசலில் கரும்புகளுடன் மண் அடுப்புகள் அமைத்து, மண் பானைகளில் பொங்கல் செய்து உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு பொங்கலைக் கொண்டாடுவர்.
ஆனால், சமீப காலமாக கேஸ் அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மண்பானைகளைப் பயன்படுத்தி மண் அடுப்புகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. இதனால், மண்பாண்டங்கள் செய்வதைத் தொழிலாகக் கொண்டு அவற்றையே வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களின் நிலை கவலைக்குள்ளாகியுள்ளது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மண் பானைகள் மற்றும் மண் அடுப்புகள் செய்யும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மண்பாண்டங்கள் செய்வதற்குப் பெயர் போன ஊரான சுந்தரபாண்டியபுரம் பகுதியில் சுமார் 15,000 மேற்பட்ட மண் அடுப்புகளைச் செய்து முடித்துள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் அவை விற்பனையாகுமா அல்லது யாருக்கும் பயனற்று வீணாகுமா என்ற பரிதவிப்புடன் காத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகத் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் 3 தலைமுறையாக மண்பானை மற்றும் மண் அடுப்புகள் செய்யும் தொழில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, மக்கள் கேஸ் அடுப்புகள் மற்றும் ஸ்டீல் பாத்திரங்களுக்கு மாறிவிட்ட நிலையில் மண் பானைகள் செய்யும் தொழில் நலிவடைந்து விட்டதாக அத்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தொழில் மூலமாக அதிகப்படியான வருவாய் தங்களுக்கு இல்லாத போதிலும் தங்களின் குலத் தொழில் என்பதால் இதனைக் கைவிடாமல் செய்து வருவதாக இத்தொழிலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.