நேதாஜி சுபாஷ் சேனைப்படைத் தலைவர் கைது; 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு! தென்காசி:பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் கடந்த சில நாட்களாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருந்தது. ஒரு சமூகத்திற்குச் சொந்தமான இடத்தில் இன்னொரு சமூகத்தினர் கம்பம் நட்டு கொடியேற்றியதாலும், இன்னொரு சமூகத்தவரின் போஸ்டர் மீது அவமரியாதை செய்ததாக மற்றொரு சமூகத்தவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இருதரப்பிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்ததால் அந்த கிராமத்தில், கடந்த சில நாட்களாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மாலை நேதாஜி சுபாஷ் சேனைப்படை என்ற அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் நான்கு பேர் மேலப்பாவூருக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது கிராமத்தின் நுழைவுப் பகுதிகளில் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், ''நீங்கள் ஊருக்குள் சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதால் நீங்கள் செல்ல முடியாது'' என்று தடைவிதித்தனர். ஆனால், தடையை மீறி செல்ல முயன்றதால் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சேனைப்படைத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் மற்றும் நான்கு பேர் தென்காசி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன் பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு மையத்தில் மாணவி உள்ளாடை அகற்றச் சென்னதாக எழுத விவகாரத்தில் திருப்பம்!