தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (ஜூலை 5) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதுமே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே சாரல் மழையும், பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இயற்கைச் சீற்றங்கள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. மேலும் குற்றாலம் பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் மூழ்கி காணாமல் போகும் அளவிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் உள்ள இரட்டைக் குளம் என்கின்ற குளம், தற்போது அதிகப்படியாக மழை பெய்ததால், குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து காற்றாற்று வெள்ளம் போல் உள்ளது.
அதனைத் தொடர்ந்து குளம் உடைப்பு ஏற்பட்டு, குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தற்போது முழுவதுமாக பாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது, வயல்வெளிகளில் பாய்ந்த நீரால், வயல்வெளிகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது.