தென்காசி மாவட்டத்தில் நீர் நிலைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் ரஷ்யா, ஆஸ்திரேலியா, சைபீரியா நைஜீரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வந்து செல்கின்றன. கூழைக்கடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், டால்மிஷன் (எ) பெலிகன் வகை பறவை, பாம்புதாரா, பட்டை தலை வாத்து என சுமார் நூற்றுக்கும் அதிகமான பறவையினங்கள் இங்கு வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இங்கு வரும் பறவைகளின் வசதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் தென்காசி மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் செந்தில்குமார் இன்று (ஆக. 30) மாவட்டம் முழுவதுமுள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்தார்.
இதில் தென்காசி அருகிலுள்ள சுந்தரபாண்டியபுரம் பெரியகுளம், இலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளம் ஆகிய இரண்டு குளங்களையும் பார்வையிட்டுள்ளனர்.