போதையில் முரட்டு வைத்தியம் செய்த வீடியோ வைரல் தென்காசி: மதுபோதையில் நோயாளிக்கு பல் புடுங்கியதை ஒப்புக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் பேருந்து நிலையம் அருகே ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மதுபோதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரிடம் பல் பிடுங்குவதற்காக கடையம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் இன்று (அக்.5) சென்றுள்ளார். அப்போது இவருக்கு மருத்துவர் மதுபோதையில் பல் அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிய நடைமுறைகளை எதையும் பின்பற்றாமல் முரட்டுத்தனமாக பல்லை பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனால், செல்வன் வாயில் இருந்து ரத்தம் வரத் துவங்கியுள்ளது. இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட செல்வம் அவரது நண்பருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே மருத்துவரிடம் மது அருந்திவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா? என்று செல்வத்தின் நண்பர் கேட்டுள்ளார்.
மேலும், மருத்துவரிடம் நியாயம் கேட்பதை செல்வத்தின் நண்பர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதற்கு மருத்துவர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்? இதெல்லாம் ஒரு பிரச்னை கிடையாது. 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். மேலும், தான் மது அருந்தியதை மருத்துவர் ஒப்புக்கொள்ளும் காட்சிகளும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல் மருத்துவராக நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நடித்து இருப்பார். அதில், பல் பிடுங்க வந்தவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லாமல், அவரது இருக்கையில் இருந்த படியே, சர்வ சாதாரணமாக கட்டிங் பிளேடைக் கொண்டு முரட்டுத்தனமாக பல்லைப் பிடுங்கிடுவார்.
அதற்கு முன்பே, 'ஒரு பல் பிடுங்குவதற்கு 50 ரூபாய் பீஸ்' என்று பேரம் பேசும் காமெடியான காட்சியும் அதில் இடம் பெற்றிருக்கும். இறுதியாக, அந்நபர் ஒரு பல்லை பிடுங்கியதற்கு 100 ரூபாய் கட்டணம் கொடுத்தவுடன் மீதம் 50 ரூபாய் சில்லறை இல்லை என்பதால், நன்றாக இருந்த மற்றொரு பல்லையும் வடிவேலு பிடுங்கி கையில் கொடுத்துவிடுவார்.
தற்போது கடையத்தில் மதுபோதையில் பல் சிகிச்சை செய்து வரும் மருத்துவரின் நடவடிக்கையும் வடிவேலு காட்சியை நினைவுப்படுத்துகிறது. மேலும் கடையம் பகுதி விவசாயிகள், ஏழை மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். எனவே, சாதாரண மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் மருத்துவர், இதுபோன்று மது அருந்திவிட்டு மிகவும் அலட்சியமாக சிகிச்சை செய்யும் சம்பவம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:காதலின் சின்னமான ரோஜா பூவில் இவ்வளவு விஷயம் இருக்குதா..?