தென்காசி மாவட்டத்தில், தென் மேற்குப் பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், கார் பருவ நெல் சாகுபடி நடைபெறும். இதற்கு வட கிழக்குப் பருவமழை காலத்தில் சேமிக்கும் தண்ணீரும், தென் மேற்குப் பருவமழையால் கிடைக்கும் தண்ணீரும் விவசாயத்திற்கு பயன்படுகின்றது.
தென்மேற்குப் பருவமழை தீவிரம்: தென்காசி வட்டார அணைகளின் நீர்மட்டம் உயர்வு!
தென்காசி: தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளாக உள்ள கடையநல்லூர், புளியரை, செங்கோட்டை , பண்பொழி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையால் அடவிநயினார் அணையின் மொத்த கொள்ளளவான 132 அடியை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு வரும் 25 கன அடி தண்ணீர் வரத்தும் அப்படியே வெளியேற்றப்படுகின்றது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோடு ஆரம்ப கட்ட விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் குண்டாறு அணை, கருப்பாநதி அணை, ராமநதி அணை உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இப்பகுதி விவசாய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.