தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி தெளித்து கைகளை சுத்தம் செய்தல், மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தின் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பொதுமக்கள் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் மருந்து உட்கொண்டால் போதுமானது என்றும், மது அருந்துவதால் விரைவில் குணம் பெறலாம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.
பொதுமக்கள் யாரும் அத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு, சுகாதாரத்துறை வழங்கி வரும் வழிகாட்டு முறைகளை மட்டும் பின்பற்றும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் மது அருந்துவது, உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.