தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (25). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப் பிரச்னை தொடர்பான புகாரின் பேரில் கடந்த மே 8ஆம் தேதி அன்று காவல்துறையினர் விசாரணைக்குச் சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அறைந்து திருப்பி அனுப்பிவிட்டார்.
மீண்டும் மே 10ஆம் தேதி அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமரேசன் வீகேபுதூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் குமரேசனை உதவி ஆய்வாளர், காவலர்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் பூட்ஸ் காலால் வயிறு, முதுகுப் பகுதியில் மிதித்து, லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி அன்று, உடல்நிலை குன்றியதால், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குமரேசன் சேர்க்கப்பட்டார். மருத்துவர் கேட்டபிறகுதான் குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து வாய்திறந்துள்ளார். இதையடுத்து கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார்.