தென்காசி:தை பொங்கல் விழாவை முன்னிட்டு சேவல் சண்டை நடத்தக் கோரிய வழக்கில், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மனுவைப் பரிசீலனை செய்து ஜனவரி 11ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் ராம் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தை பொங்கல் முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழரின் கலைகளில் ஒன்றான வெற்றுக்கால் சேவல் சண்டை, வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதே போன்று கடந்த வருடம் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சேவல் சண்டை நடைபெற்றது. அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன் ஏற்பாடுகளுடன் சேவல் சண்டை நடைபெறும்.
இதையடுத்து தைப்பொங்கல் முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அலுவலரிடம் மனு கொடுத்தோம். இந்த மனுவைப் பரிசீலித்து தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உரியப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சேவலின் உயிருக்கு எவ்வித ஆபத்து ஏற்படுத்தும் வகையில் போட்டி நடைபெறாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் சேவல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி மனுவைப் பரிசீலனை செய்து ஜனவரி 11ஆம் தேதிக்குள் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தடையை மீறி காளை விடும் விழா - தூக்கி வீசப்பட்ட பெண்!