தென்காசி தனி மாவட்டமாக உதயமானதையடுத்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தென்காசி மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வருகை தந்தார். மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ”திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உச்சபட்ச விலை வழங்க வேண்டும்.
ஒருபடி மேலாக நிலங்களை கையகப்படுத்தும் போது சுங்க வரி வசூலிப்பில் ஆண்டு வருமானத்தில் ஒரு தொகையை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களையும் பங்குதாரராக சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப் போன்று தமிழ்நாட்டில் காட்டுபன்றியை வனவிலங்கு பட்டியல் இருந்து நீக்கி, வனவிலங்குகள் விவசாய நிலத்தில் நுழைவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார்.
ராகுல்காந்தியின் நடைபயணம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் ஒற்றுமைக்காக அமைந்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வரும் வேளையில், பாராளுமன்றத்தையே விவசாயிகளின் போராட்ட களமாக மாற்றியவர் ராகுல் காந்தி. அந்த வகையில் விவசாயிகளின் பாதுகாப்பு நலனில் ராகுல் காந்தி முதல் இடம் வகிப்பதாக கூறினார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் எச்சரிக்கை எந்தவித கருத்து கேட்பு இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். மின் கட்டண உயர்வில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை தொடையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் வகையில் உள்ளது. விளம்பர மாயையால் மக்களின் போராட்டங்களை திசை திருப்பி விட முடியாது என்பதை தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்’ - அமைச்சர் பொன்முடி