தமிழ்நாட்டின் சாபக்கேடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவரை அரசு சரியாக பயன்படுத்துகிறது - பாமக மாநில பொருளாளர் திலகபாமா தென்காசி: தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பகுதியில் நேற்று (ஜூன் 2) பாமக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா மணமக்களை வாழ்த்தி பேசினார். இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், "தென்காசி மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இது குறித்து பல்வேறு தரப்பினர் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
எனவே, கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கக் கோரி, வரும் 5ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், தமிழ்நாடு-கேரள எல்லையான புளியரை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை முடக்கும் விதமாக காவல்துறை அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், காவல்துறை அனுமதி அளித்தால் காவல்துறை அனுமதியோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இல்லையெனில், அதனை தகர்த்தெறிந்து இந்த ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மது அருந்தி வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர். கடந்த தேர்தலின்போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று கூறினார். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விட்டார். சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.
விபத்திலோ, பட்டாசு தொழிற்சாலையில் குடும்பத்தை காப்பதற்காக வேலை பார்க்கும் தொழிலாளி இறந்தாலோ, ராணுவ வீரர் இறந்தாலோ 2 அல்லது 3 லட்சம் ரூபாய் நிவாரணம் தரும் அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது மூலம் அரசு தவறுகளை மூடி மறைக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து கட்சிகளிலும் இருந்து பணம் எப்படி சம்பாதிப்பது என்று கற்று தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவரை திமுக அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சாபக்கேடு செந்தில் பாலாஜி. மேலும் மதிப்பெண்ணில் பின் தங்கிய மாணவர்களை மேம்படுத்த என்ன வழி என்று சிந்திக்கிற இடத்தில் திமுக அரசு இல்லை.
மது விற்பனையில் எவ்வளவு இலக்கு வைக்கலாம் என்று சிந்திக்கிற இடத்தில், திமுக அரசு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்திருந்தால் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் மக்களுக்கு கல்வி பெற்று வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மூலம் பெற்று தந்திருக்கலாம்.
ஆனால், அதைப் பெற்றுத் தர மனமில்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரிகரன், வடக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர்.சீதாராமன், மத்திய மாவட்ட செயலாளர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தென்காசி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு எதிரொலி; பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை