தென்காசி:சுரண்டை - சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நேற்று (ஜுலை 13ஆம் தேதி) இரவு சுமார் 9.30 மணி அளவில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. வங்கியில் தீ விபத்து ஏற்பட்ட கரும் புகை வந்து உடனே அலாரம் அடிக்க தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அலாரம் அடித்ததைக் கண்டு உடனடியாக சுதாரித்த வாட்ச்மேன் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுரண்டை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் சாமி, குமார், விவேகானந்தர், உதய பிரகாஷ் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலாளர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் சில முக்கியமான டாக்குமென்ட்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வங்கியில் சுரண்டை சேர்ந்த மரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த வங்கியில் தீப்பிடித்து எரிந்ததில் கம்ப்யூட்டர் உட்பட சிசிடிவி கேமரா என பல பொருள்கள் எரிந்து நாசமாயின. சில முக்கியமான ஆவணங்கள் எதுவும் எரியவில்லை என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.