தென்காசி: சுரண்டையில் காமராஜர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றில் சுமார் 2700-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், மாறாந்தை, தேவர்குளம், கடையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வந்து கல்வி பயின்று செல்கின்றனர்.
பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்:ஆனால், கல்லூரி ஆரம்பிக்கும் நேரமான 10 மணிக்கு முன்பாக கல்லூரிக்கு வரும்போது போதிய பேருந்து வசதிகள் இல்லை. இதனால் தினமும் சுமார் 300 முதல் 400 மாணவ, மாணவிகள் தாமதமாக வருவதாகத் தெரிய வருகிறது. இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் 10 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் வரவேண்டும் எனவும்; 10 மணிக்குப் பிறகு வருபவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிப்பு கொடுத்துள்ளனர்.
ஆனால், சரியான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இன்று(ஏப்.12) காலையில் 10 மணிக்கு கல்லூரி கேட் பூட்டப்பட்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கின. ஆனால், சரியான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தாமதமாக வந்த மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வெளியே சுமார் 200 பேர் குவிந்தனர். மேலும், தங்களைத் தொடர்ந்து கல்லூரிக்குள் அனுமதிக்குமாறு பேராசிரியர்களிடம் கேட்டுக்கொண்டனர்.