தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சங்கரன்கோவில், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த சிவக்குமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனை கண்டித்தும் கல்லூரியில் அடிப்படை வசதிகள் வேண்டியும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்த வந்த கல்லூரி முதல்வருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஒரு கும்பலைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் சிவக்குமார் பணியிடை நீக்கத்திற்கு கல்லூரி முதல்வர் ஹரிகங்காதரன் தான் காரணம் என கூறி அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.