தென்காசி: அருகே குத்துக்கல் வலசை பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாநில சிறுபான்மைத்துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது ”தமிழக முதல்வர் உடல் நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார். இது எங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற அவர் பாடுபட்டு வருகிறார்”.
கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மாணவி இறப்பிற்கு உரிய விசாரணையை தமிழக அரசு நடத்தும். அமைதி பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் வன்முறை தூண்டி விட்டு அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் முயற்சி நடைபெறுகிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார்.
பள்ளி நடத்துபவர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட இருக்கும் மாணவர்களின் திறன், மனநிலையைப் பார்த்துச் செயல்பட வேண்டும். தமிழகத்தில் உலக நாடுகள் தொழில் தொடங்க வருகின்றனர். உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் ஒளிம்பியாட் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்குக் காரணமே நாம் மொழியால், இனத்தால், மதத்தால் பிளவுபடாமல் தமிழராய் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதற்குத்தான்.