தென்காசி:கடையநல்லூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த குற்றப்பின்னணி கொண்ட 6 பேரை மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அடங்கிய போலீசார் நேற்று (அக்.3) கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடையநல்லூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பருத்திவிலை தெருவில் சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சமுற்றதாகவும், கிடைத்த ரகசியத்தகவலின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொன்னரசு, அசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், விஜயகுமார் மற்றும் காவலர்கள் பருத்திவிலை தெருவில் உள்ள வீடுகளை சோதனை செய்ததில் சரோஜா என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பலமுறை கதவைத் தட்டியும் திறக்காத காரணத்தால், சந்தேகம் அடைந்து சட்டவழி முறைகளைப் பின்பற்றி, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 6 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் மேற்குறிப்பிடும் நபர்களை விசாரணை செய்ததில் சேரன்மகாதேவி சங்கன்திரடைச் சேர்ந்த முப்புடாதி(எ)ஆறு (27), நெட்டூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சுரேஷ் கண்ணன்(எ)நெட்டூர் கண்ணன்,
மேலசெவல் பகுதியைச்சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் லட்சுமணகாந்தன்(எ)கருப்பசாமி, ஊத்துமலை அம்மன்கோயில் தெருவைச்சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் மாரிமுத்து, அய்யனார்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த உக்கிரமசிங்கம் என்பவரின் மகன்களான சூர்யா மற்றும் சத்யா என்றும், மேற்குறிப்பிடும் நபர்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.